அபிவிருத்தி குழுக்களின் தலைவர்களாக நியமிக்குமாறு 20க்கு ஆதரவளித்த முஸ்லிம் எம்.பிக்கள் கோரிக்கை
மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்தி குழுக்களின் தலைவர்களாக தம்மை நியமிக்குமாறு 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவிடமே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களான நசீர் அஹமட், எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசீம், எம்.எஸ்.தௌபீக், இஷாக் ரஹ்மான், அலி சப்ரி ரஹீம் மற்றும் எம்.எம். முஷாரப் ஆகியோரினாலேயே இந்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேற்குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவர்களாகவும், தேர்தல் தொகுதிகளிலுள்ள பிரதேச அபிவிருத்தி குழுக்களின் தலைவர்களாகவும், தங்களின் மாவட்டத்திலுள்ள வேறு சில பிரதேச அபிவிருத்தி குழுக்களின் இணைத் தலைவர்களாகவும் தம்மை நியமிக்குமாறே இவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
எவ்வாறாயினும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் மாத்திரம், அவரது வேண்டுகோளுக்கமைய காத்தான்குடி, ஏறாவூர், கோரளைப் பற்று மேற்கு மற்றும் கோரளைப் பற்று மத்தி ஆகிய பிரதேச அபிவிருத்தி குழுக்களின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)