ஏ.சி.எஸ்.ஹமீட் இலங்கைக்கு ஆற்றிய சேவைகளால் முஸ்லிம்களை கௌரவப்படுத்தினார்: ஹலீம்
முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் கணவான் அரசியல் தலைவருமான ஏ.சி.எஸ்.ஹமீட் இலங்கைக்கு ஆற்றிய சேவைகளால் இந்நாட்டு முஸ்லிம்களுக்கு கௌரவத்தை பெற்றுத்தந்தார் என முன்னாள் அமைச்சரும் கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எச்.அப்துல் ஹலீம் தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்தில் கல்விக்கான உதவிகள் தேவைப்படும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு ஏ.சி.எஸ்.ஹமீட் பவுண்டேஷனின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் உப தவிசாளரும் ஹாரிஸ்பதுவ தொகுதியின் பிரதான அமைப்பாளருமான அப்துல் ஹலீமின் தலைமயில் கண்டி, மாவில்மடயில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
"ஏ.சி.எஸ்.ஹமீடின் அரசியல் வரலாற்றுப் பக்கங்கள் மிகுந்த கணதியான உள்ளடக்கத்தை கொண்டுள்ளது. 1960ஆம் ஆண்டு முதல் 1999ஆம் ஆண்டு அவர் மரணிக்கும் வரை தொடர்ச்சியாக அத்தனை பாராளுமன்றத் தேர்தல்களிலும் வெற்றிபெற்ற ஒரு ஸ்திரமான அரசில் தலைமையாக திகழ்ந்தவர்.
ஏ.சி.எஸ்.ஹமீட், ஜே.ஆர். அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சை பொறுப்பேற்கும் வரையில் நாட்டின் பிரதமரினால்தான் வெளிநாட்டு விவகாரங்கள் கையாளப்பட்டுள்ளன.
அறிவார்ந்த தூரநோக்கு சிந்தனை, ஆங்கிலப் புலமை, நுனுக்கமான செயற்றிரன், அரசியல் சானக்கியத்திலும் வல்லவராக திகழ்ந்த ஏ.சி.எஸ்., ஜே.ஆர்.இனால் இனங்காணப்பட்டமையினால் இலங்கையின் முதலாவது வெளிநாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இதன் மூலம் இலங்கையின் பெருமையை உலக அளவில் எடுத்துச் சென்ற எனது மாமாவான ஏ.சி.எஸ்.ஹமீட் இலங்கையில் பல நாடுகளின் தூதுவராலங்களை அமைப்பதற்கு வழி வகுத்ததுடன் உலகின் பல நாடுகளிலும் இலங்கையின் தூதுவராலங்களை நிறுவினார்.
இதன்மூலம் இலங்கை சர்வதேச அளவில் பெரும் செல்வாக்கு செலுத்தியது. இஸ்ரேல் தவிர்ந்த ஏனைய மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கை தூதுவராலயங்களை நிறுவி நாட்டுக்கு பெருவாரியாக அந்நிய செலாவனியை ஈட்டித்தர வழிவகுத்தார். இன்றும் அதன் அருவடையே இலங்கையின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்காற்றுகின்றது.
வெளிவிவகார அமைச்சராகவும் நீதி அமைச்சராகவும் உயர்கல்வி அமைச்சராகவும் பதவி வகித்ததுடன் இந்த அமைச்சுக்கள் மூலம் நாட்டுக்கும், கண்டி மாவட்டத்திற்கும் ஹாரிஸ்பதுவ தொகுதிக்கும் பெரும் சேவைகளை செய்துள்ளார்.
ஹாரிஸ்பதுவ தொகுதியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் இவரது காலத்தில் ஒரு புரட்சி இடம்பெற்றதாகத்தான் கூறமுடியும். குடிநிர் விநியோகம், மலசல வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தல், மின் விநியோகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் என்பவற்றை குறிப்பிட்டு சொல்லலாம்.
கண்டி மாவட்டத்தில் ஏனைய தொகுதிகளைவிட ஹாரிஸ்பதுவ தொகுதிதான், அனைத்து வசதிகளும்கொண்தாக இருக்கிறது. அத்துடன் இந்த தொகுதியிலுள்ள அனைத்து பாடசாலைக்கும் ஒவ்வொரு கட்டடத்தையேனும் அவர் பெற்றுக்கொடுத்துள்ளார்.
ஏ.சி.எஸ்.ஹமீட் அமைச்சராக இருக்கும்போது, நான் மாகாண அமைச்சராக பதவிவகித்த போது மத்திய மாகாணத்தில் சுகாதார கட்டமைப்பு மற்றும் முஸ்லிம் கல்வி வளர்ச்சிக்கு அவரின் ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் எனக்கு பக்கபலமாக இருந்தது.
ஏ.சி.எஸ்.ஹமீட் இன்றும் கண்டி மாவட்ட மக்கள் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கிறா். தாய் நாட்டின் முன்னேற்றத்திற்காக எல்லா தரப்பினருடனும் இணைந்து பணியாற்றியுள்ளார். குறிப்பாக இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு இடர்கள் ஏற்படும்போது, உணர்வுபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் அதனை அனுகினார்.
முஸ்லிம் தலைமைகளுடன் கூட்டிணைந்து பணியாற்றியதுடன், பின்னாட்களில் புதியதலைமைகளை வழிநடத்தியும் இருக்கின்றார்" என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹலீம் சுட்டிக்காட்டினார்.
கண்டி மாவட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், ஹாரிஸ்பதுவ, பூஜாபிடிய, அக்குறணை உள்ளிட்ட பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Comments (0)
Facebook Comments (0)