வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாக். உயர் ஸ்தானிகராலயம் நிவாரணம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாக். உயர் ஸ்தானிகராலயம் நிவாரணம்

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாகிஸ்தான் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உணவுப் பொருட்களை கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தினால் விநியோகிக்கப்பட்டது.

காலி மற்றும் பேருவளை ஆகிய பிரதேசங்களுக்கு இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் முஹம்மது சாத் கட்டாக், நேற்று (12) சனிக்கிழமை நேரடியாக விஜயம் செய்து குறித்த நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, முன்பள்ளிகள் மற்றும் ஆரம்பக் கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் கல்வி சேவைகள் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த டி சில்வாவின் வேண்டுகோளிற்கமைய பேருவளை பிரதேசத்திற்கான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பழீலும் கலந்துகொண்டார். இதேவேளை, கரிம மற்றும் இயற்கை உரங்கள் உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சர் மோகன் பிரியதர்ஷன டி சில்வாவின் வேண்டுகோளிற்கமைய காலி பிராந்தியத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

அண்மையில் பெய்த பலத்த மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண் சரிவுகள் காரணமாக பல உயிரிழப்புக்கள் இடம்பெற்றதோடு பலர் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.